×

பதில் எங்கே?

நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேச்சும், அதற்கு பதிலடியாக இரு அவையிலும் பிரதமர் மோடி அளித்த பதிலுரையும் தான் இன்று வரை அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக உள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரையை முடித்து விட்டு, பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தான் மக்களவை வந்தார் ராகுல்காந்தி. வந்த வேகத்தில், அவையில் பேசிய அவர் அடித்தது எல்லாம் சிக்சர். குறிப்பாக பிரதமர் மோடி- தொழில் அதிபர் அதானி நட்பு குறித்தும், அதன் வழியாக அதானி பெற்ற லாபங்கள் குறித்தும் அவரது பேச்சு மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ராகுல் பேசிய அன்று, பிரதமர் மோடி நாடாளுமன்றம் வந்திருந்தார். ஆனால், அவைக்கு வரவில்லை. அடுத்த நாள் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளித்து மக்களவையில் பிரதமர் பேசினார். அப்போது, அதானி குறித்த எதிர்கட்சிகள் மற்றும் ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதற்கு அடுத்த நாள், மாநிலங்களவையில் பிரதமர் பதிலுரை அளித்தார். அப்போதும், அதானி குறித்த சர்ச்சைகளுக்கு அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. குறிப்பாக 2014ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2022ல் எப்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தார் என்ற கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், ராகுல் காந்தியை, காங்கிரஸ் கட்சியை, எதிர்க்கட்சிகளை மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். எல்லாவற்றையும் விட மேலாக ‘நேருவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றால், சிலருக்கு கோபம் வந்து ரத்தக் கொதிப்பு ஏற்படும். நேருவின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்கிறார்கள்.  அந்த தவறை நாம் சரிசெய்வோம். ஆனால், நேருவின் குடும்பப்பெயரை வைத்துக்கொள்ள அவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நேரு குடும்பப்பெயர் வைத்திருப்பதில் வெட்கமா? என்ன அவமானம்? இவ்வளவு பெரிய ஆளுமையை ஏற்றுக் கொள்ள குடும்பமே தயாராக இல்லாதபோது, ​​எங்களை ஏன் கேள்வி கேட்கிறீர்கள்’. என்று பேசி அவையில் இருந்த அனைவரையும் அதிர வைத்தார்.ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர். அவர் மாநிலங்களவையில் இல்லை. அவரைப்பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் மக்களவையில் பதில் அளித்தபோதே அங்கேயே பிரதமர் அதை எழுப்பி இருக்கலாம். அப்போது, அவரும் பதில் கூறியிருப்பார். நேருவுக்கு ஒரே மகள். அவரது பெயர் இந்திரா. அவரது கணவர் பெரோஸ் காந்தி. அவர் வழியாகத்தான் காந்தி என்று பெயர் ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி என்றும் தற்போது ராகுல் காந்தி, வருண் காந்தி, பிரியங்கா காந்தி என்றும் வந்திருக்கிறது என்று அவையில் பதிலாக பதிய வைத்து இருப்பார். அதற்கு, பிரதமர் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அவையில் இத்தனை ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை. அவர் மட்டுமல்ல, ஒன்றிய அமைச்சர்களும் கூட மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. இதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்….

The post பதில் எங்கே? appeared first on Dinakaran.

Tags : Parliament ,President ,Congress ,Rahul Gandhi ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...